NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் – பெயர் பட்டியலை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை!

மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுமந்திரனுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான நேற்று மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி 2015 – 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னடுக்கப்பட்ட தேர்தல் வரைபினை அமுல்படுத்துதல் தொடர்பாகவும், இச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதனையும் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், ஊழல் ஒழிப்பு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் முறை கேடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சிபாரிசின் பேரில் கொடுத்த மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது, மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்களை குறித்தான சந்தேகத்தினையும் ஏற்படுத்துவதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலினை உடனடியாக வெளியிடுமாறும் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

அத்துடன், தொடர்ச்சியாக இவ்விடயங்கள் தொடர்பாக வேண்டிய ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

Share:

Related Articles