NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுரங்குளியில் சொகுசு பஸ் தீப்பிடித்தமைக்கான காரணம் வெளியானது – விசாரணையில் அம்பலம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து சம்பவம் தொடர்பில் குறித்த பஸ் தீப்பிடித்தமைக்கான காரணம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மூன்று கோடி ரூபா பெறுமதியான பஸ்ஸூக்கான காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காக உரிமையாளரால் திட்டமிட்டு பஸ்ஸூக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்றில் முன்னராக செய்தி வெளியாகியிருந்தது.

இந்த பஸ் தீப்பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கு பஸ்ஸில் இருந்து மிகவும் பெறுமதியான பாகங்கள் மற்றும் உதிரிபாகங்கள் அகற்றி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த உதிரிபாகங்கள் அனைத்தும் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸில் கூடுதல் கருவி பொருத்தப்பட்டு, அதன் என்ஜின் அதிக வெப்பம் அடைந்தவுடன் தீப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தீப்பிடித்த பஸ் யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் மதுரங்குளிக்கு வந்ததாகவும், புத்தளத்தில் தேநீர் அருந்துவதற்காக பஸ்ஸை நிறுத்திய போது அதில் எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் காணப்படவில்லை என பயணிகள் பலர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததா? என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மற்றும் மோட்டார் ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில், பஸ்ஸூக்கான மூன்று கோடி ரூபாய் காப்புறுதி தொகையைப் பெறுவதற்காக வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஸ் தீ விபத்து தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles