தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து நெருப்புக்கோழி ஒன்று தப்பி ஓடியது. அதிக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலைகளில் அது ஓடுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன.
‘தடோரி’ என்ற பெயர் கொண்ட அந்த ஆண் நெருப்புக்கோழி தனிமை காரணமாக பண்ணையிலிருந்து தப்பியதாக அப்பண்ணையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பண்ணையில் இரண்டு நெருப்புக்கோழிகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்று பெப்ரவரி மாதம் இறந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த இரு நெருப்புக்கோழிகளும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து குஞ்சுகளாக இருந்தபோது அந்தப் பண்ணைக்குக் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டன.
தன்னுடன் இருந்த பெண் நெருப்புக்கோழி இறந்த பிறகு, தடோரிக்கு மனவுளைச்சல் ஏற்பட்டதாகப் பண்ணையின் உரிமையாளர் கூறினார்.
பண்ணையின் வேலிகளுக்கு இடையில் உள்ள மிகக் குறுகிய இடைவெளிக்குள் புகுந்து தடோரி தப்பியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒரு மணி நேரத்தில் அது மீண்டும் பிடிப்பட்டு பண்ணைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் கால்களில் இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அது தற்போது ஓய்வெடுத்து குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.