R.M Sajjath
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலக மட்டத்தில் முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் புஞ்சிஹவா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சிலவற்றை வேறு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் பொதுச் சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தொழிலாளர் திணைக்களம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களால் உரிய முறையில் விசாரணை செய்யப்படுகிறதா? என்பதை தாம் மேற்பார்வையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.