பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பொது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போல் உடையணிந்த இஸ்ரேலிய இராணுவ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவ படையை சேர்ந்த வீரர்கள், நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்றும் நோயாளிகள் போல் வேடமணிந்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையின் 3ஆம் தளத்திற்கு நேரடியாக விரைந்து சென்ற அவர்கள், அங்கு 3 சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்களை கொலை செய்துள்ளனர்.
எனினும், கொல்லப்பட்ட 3 பேரும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்றும் அவர்களில் மொஹம்மெட் ஜலாம்னெஹ் எனும் முக்கிய பயங்கரவாதிக்கு குறி வைத்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் பாராட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.