இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குறித்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 213 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ஓட்டங்களையும், பந்துவீச்சில் மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
214 என்ற கடின வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பம் கிடைத்தது. பெத்தும் நிஸங்க 79 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் குவித்தாலும், அடுத்துவந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 43 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. இரண்டாவது டி20 ஆட்டம் நாளை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.