முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து பிரதிவாதிகளை விடுவிப்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் எனக் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதகமான முறையில் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால், பிரதிவாதிகளை விடுவிக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்போது, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்பி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமெனச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இரு தரப்பும் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பாணை விடுக்காமல் இருப்பதா, இல்லையா? என்பது குறித்து 24ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.