இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியினால் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதத் தலைப்பில் உள்ள தமிழ்ப் பிழை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையிலேயே பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்க்ஷ என பொறிக்கப்பட வேண்டிய பெயரானது “குா்டுடுபுா்யு ருா்ஜபுகு்ஷ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அறிக்கை வெளியான பின்னர் பலரும் இந்த விடயத்தை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்ட நிலையில், தற்போது இந்த விடயம் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, தன்னுடைய கடிதத் தலைப்பில் தன்னுடைய பெயர் மூன்று மொழிகளிலும் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் கூட கவனிக்காமை, தமிழர்கள் மீதான அவரது அக்கறையின்மை அல்லது வெறுப்பினையே வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக தமிழர் உரிமைசார் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முன்னாள் ஜனாதிபதியின் கடிதத் தலைப்பில் அவரது பெயர், கொட்டை எழுத்தில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூட ஒரு தமிழர் அவர் அருகில் இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறெனின், இலங்கையின் முன்னாள் தலைவராக, அவர் எவ்வாறு, தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் விடயம் சார்ந்து அவர் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விடயமானது சாதாரணமாக சிரித்துவிட்டு கடந்துபோகும் விடயமல்ல எனவும், மாறாக தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதுமான அவரது பொறுப்பற்ற அல்லது அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக குறித்த செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தமிழில் பெயரை சரியாக குறிப்பிடாமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பாக தாம் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளையும் பெறும் கோட்டாபய ராஜபக்க்ஷ, இந்த தவறை கட்டாயம் சரி செய்ய வேண்டும் எனவும் அநுருத்த பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.