யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது ,படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோகிராம் எனவும், கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.