யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக சகல நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் அவசர செய்தியொன்றை விடுத்துள்ளார்.
அந்தச் செய்திக் குறிப்பில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். அண்மையில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதாரத் துறை தம்மாலான முழு வீச்சில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமாக உள்ளது.
கடந்த 3 நாட்களாகக் கொழும்பில் இருந்து வருகை தந்த பூச்சியியல் ஆய்வுக் குழுவினரால் பல நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் இனங்காணப்பட்டுள்ளன.
உடனடியான துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அகற்றுவதுடன் இத்துடன் கள நிலைமையை வாராந்தம் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்படும் நிறுவனங்களுக்கு எதிராகத் தொற்று நோய் பரவ ஏதுவான சூழல் உள்ளதாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார வைத்திய அதிகாரிகளையும் பொலிஸாரையும் கோரியுள்ளேன்.
இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் மாகாண சுகாதார சேவைகள் பாளிப்பாளர் பணிமனையின் இலக்கமான 0761799901 இற்குத் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.