யாழ்ப்பாணத்தில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களில் சிலருக்கு காசநோய் (Tuberculosis) கண்டறியப்பட்டுள்ளதாக துறைசார் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவனுக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் அவர்களுக்கும் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த வைத்திய நிபுணர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் அவர்கள் வைத்திய கண்காணிப்பில் இருப்பதாக வைத்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் மாணவர்களிடையே பரவியுள்ள காசநோய் பாடசாலையில் பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய மாணவர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை 14 நாட்கள் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பின்னர் முக கவசங்களை அணிந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காச நோயின் ஆரம்ப நிலை காணப்படுவதுடன் உரிய முறையில் சிகிச்சை பெற்றால் ஏனையவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் எனவும் வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.