(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஆணைமடு பிரதேசத்தில் வயல்வெளியில் நின்று பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த 11 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ கோப்ரல் ஒருவரை ஆணைமடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை 24ஆவது காலாட்படை தலைமையகத்தில் கடமைகளில் ஈடுபட்டு வரும் 38 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி பாடசாலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு அருகில் உள்ள வயலில் பறவைகளை துரத்திக் கொண்டிருந்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த சந்தேகநபர், நல்லவிதமாக சிறுமியுடன் உரையாடி, சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனது சகோதரியை யாரோ இழுத்துச் செல்வதைக் கண்ட இளைய சகோதரர் தனது தாயிடம் சத்தமிட்டுள்ளார். அதன் பின்னர் தாய் கூச்சலிடும் பொழுது, சந்தேகமடைந்த இராணுவ கோப்ரல் சிறுமியைக் கைவிட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற போது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆணைமடு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சந்தேகநபரின் அடையாளத்தை சிறுமி தெரிவித்ததுடன், பொலிஸ் குழுவொன்று விரைவாக சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.