NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்தது கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டார் என தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றத்தால்‌ அவர் இன்றையதினம் விடுதலை  செய்யப்பட்டுள்ளார்.  

விஜயகலா மகேஷ்வரன்‌ சார்பில்‌ முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதங்களை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 02ஆம்‌ திகதி அன்று யாழ்ப்பாணம்‌ வீரசிங்கம்  மண்டபத்தில்‌ நடைபெற்ற  நிகழ்ச்சி  ஒன்றில் கலந்து கொண்ட  முன்னாள் இராஜாங்க அமைச்சர்‌ விஜயகலா மகேஸ்வரன்‌ நாட்டின்‌ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும்‌ வகையில்‌ “வடக்கு, கிழக்கு மாகாணங்களில்‌ வாழும்‌ தமிழ்‌ மக்கள்‌ அச்சமின்றி சுதந்திரமாக வாழ விடுதலைப்‌ புலிகள்‌ அமைப்பு மீண்டும்‌ எழ வேண்டும்‌” என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கருத்தானது அரசியலமைப்பின்‌ 06 ஆவது பிரிவின்‌ திருத்தம்‌, 1978ஆம்‌ ஆண்டு பயங்கரவாதத்‌ தடைச்‌ சட்டம்‌,, மற்றும்‌ தண்டணைச்‌ சட்டக்கோவை 120ஆம்‌ ஆகிய பிரிவுகளின்‌ கீழ்‌ குற்றமாகும்‌ என கொழும்பு குற்றப்புலனாயப்வுப்‌ பகுப்பாய்வு மற்றும்‌ தடுப்புப்‌ பிரிவு கொழும்பு பிரதான நீதவான்‌ நீதி நீதிமன்றில்‌ முதல்‌ அறிக்கை தாக்கல்‌ செய்தனர்‌.

இச்சம்பவம்‌ தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப்‌ பிரிவினரால்‌ கைது செய்யப்பட்ட முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர்‌ சார்பில்‌ முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது சமர்ப்பணத்தில்‌ தெரிவித்துள்ளதாவது,

“விஜயகலா மகேஸ்வரன்‌ ஜனாதிபதியின்‌ மக்கள்‌ சேவைத்‌ திட்டத்தின்‌ எட்டாவது நிகழ்ச்சியில்‌ அரச அமைச்சர்கள்‌ பலர்‌ கலந்து கொண்ட நிகழ்வில்‌ உரையாற்றுகையில்‌,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில்‌ தொடர்ச்சியாகப்‌ பெண்கள்‌ மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்‌ குறித்து அவர்‌ அச்சத்தையும்‌ ஆத்திரத்தையும்‌ உணர்ச்சி மேலிடக்‌ குறிப்பிட்டுப் பேசினார்‌.

தமிழீழ விடுதலைப்புலிகளின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ இதுபோன்ற வன்முறைகள் இடம்பெறவில்லை. அப்படி நடைபெற்றால்‌ அதற்கான தண்டனைகள்‌ பாரதூரமாக இருந்தன. நாட்டின்‌ சட்டம்‌ ஒழுங்கு பாதுகாக்கபட வேண்டுமாயின்‌ அத்தகைய நிர்வாகம்‌ ஒன்றினை தற்போது நாம்‌ ஏற்படுத்த வேண்டும்‌ என்று கருதியதாகவே அவரது கருத்து அமைந்திருந்ததேயன்றி நாட்டின்‌ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும்‌ வகையில்‌ உரையாற்றவில்லை” என நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சமர்ப்பணத்தையடுத்து 2018.10.08ஆம் திகதி விஜயகலா மகேஷ்வரனை ஒரு இலட்சம்‌ ரூபா சரீரப்‌ பிணையில்‌ நீதிமன்றம்‌ பிணையில்‌ விடுதலை செய்தது.

இருப்பினும் இன்றையதினம்(19.10.2023) வழக்கு நீதிமன்றில்‌ மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது,  குற்றப்புலனாய்வுப்‌ பகுப்பாய்வு மற்றும்‌ தடுப்புப் பிரிவுப்‌ பொலிஸார்‌ நீதிமன்றில்‌ தமது சமர்ப்பணத்தில்‌, 1978ஆம்‌ ஆண்டு பயங்கரவாதத்‌ தடைச்சட்டம்‌ மற்றும்‌ தண்டனைச்‌ சட்டக்கோவை 120ஆம்‌ பிரிவின்‌ கீழோ விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம்‌ தாக்கல்‌ செய்ய உத்தேசிக்கவில்லையென சட்டமா அதிபர்‌ திணைக்களம்‌ தங்களுக்கு எழுத்து மூலம்‌ அறிவித்துள்ளதாக  அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதனையடுத்து விஜயகலா மகேஷ்வரன்‌ சார்பில்‌ முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா, விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்யுமாறு நீதிமன்றினை கேட்டுக்‌ கொண்டதை அடுத்து,  முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர்‌ விஜயகலா மகேஷ்வரன்‌ கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றத்தால்‌ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின்‌ அனுசரனையில்‌ சிரேஷ்ட சட்டத்தரணி காமினி திசாநாயக்க ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா, ஆகியோர்‌ இவ்வழக்கில்‌ முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles