பணி நோக்கத்திற்காகவோ அல்லது வேறு தேவைக்காக நீண்ட விடுப்பு பெற்று வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை முடிந்து சேவைக்கு திரும்பாத அல்லது விடுமுறை நீடிப்பு பெறாத பட்சத்தில், பணியை விட்டு விலகியதாக கருதப்படும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் போது 2022 ஆம் ஆண்டில்; வழங்கப்பட்ட விசேட ஏற்பாடுகளின் கீழ் விடுமுறையைப் பெற்ற சில அதிகாரிகள் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பாத அதிகாரிகள் பணியிலிருந்து விலகியதாக அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஸ்தாபன சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2,000 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளிநாட்டு வேலைகளைப் பாதுகாக்க அல்லது பிற நோக்கங்களுக்காக விடுமுறை எடுக்க இந்த விசேட சலுகையை பயன்படுத்தினர்.
அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையுடன் வெளிநாடு செல்லும் சில அதிகாரிகள் வெளிநாட்டு விடுப்பில் தங்கியிருக்கும் காலத்தை மீறும் ஒரு குறிப்பிடத்தக்க போக்கு தற்போது இருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முறையான அங்கீகாரத்தைப் பெறாமல் அறிக்கையிடுவதைத் தவிர்த்துக் கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படாமையால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வினைத்திறனான அரச சேவையை வழங்குவதில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அரச சேவையில் கடுமையான ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
தவறு செய்யும் ஊழியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில், பதவி உயர்வு தாமதம், சம்பள உயர்வை நிறுத்துதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை அடங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.