கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கெசல்வத்தை பொலிஸார் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அளுத்கடை பகுதியில் உள்ள வீதி உணவகம் ஒன்றில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை கெசல்வத்தை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டவர் ஒரு கொத்து பார்சலின் விலையை கேட்டபோது, 1,900 ரூபா என்று கூறியபோது வெளிநாட்டவர் அதனை வாங்க மறுத்ததாகவும், பின்னர் கடை உரிமையாளர் அவரை அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் இந்த நாட்களில் பரவிவருவதுடன், அந்த காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.