(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஓமானுக்கு எதிராக புலாவாயோ அத்லெட்டிக் கழக விளையாட்டரங்கில் நேற்று (25) நடைபெற்ற பி குழு ICC உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ப்றெண்டன் மெக்முலென் குவித்த அசத்தலான சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்து 76 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன் தகுதிகாண் சுற்றில் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டிய ஸ்கொட்லாந்து சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதி பெற்றது.
ஓமான் தோல்வியுற்ற போதிலும் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் சுப்பர் 6 சுற்றில் விளையாட கடைசியும் 6 ஆவதுமான அணியாகத் தெரிவானது.
ஸ்கொட்லாந்தின் இன்றைய வெற்றியில் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் பெற்ற அரைச் சதம், கிறிஸ் க்றீவ்ஸின் 5 விக்கெட் குவியல் என்பனவும் முக்கிய பங்காற்றின.
முதல் 21 பந்துகளில் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த மெக்முலென், இறுதியாக 121 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 136 ஒட்டங்களைக் குவித்தார். 11ஆவது சரவ்தேச ஒருநாள் போட்டியில் விளையாடிய மெக்முலென் குவித்த முதலாவது சதம் இதுவாகும். அவரும் ரிச்சி பெறிங்டனும் 3ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர். ரிச்சி பெறிங்டன் 7 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
ஸ்கொட்லாந்து ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
ஆனால், மெக்முலென், பெறிங்டன் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் எஞ்சிய 37 ஓவர்களில் 273 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு மேலும் சேர்த்தது. அவர்கள் இருவரைவிட தோமஸ் மெக்கின்டோஷ் 32 ஓட்டங்களையும் மெட் வொட் 25 ஓட்டங்களையம் பெற்றனர்.
ஓமான் பந்துவீச்சில் பிலால் கான் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிகவும் கடினமான 321 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான், கிறிஸ் க்றீவ்ஸின் பந்துவீச்சை எதர்கொள்ளமுடியாமல் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
32 ஓவர்கள் நிறைவில் ஓமான் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஷொயெப் கான், நசீம் குஷி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் அவர்களால் ஓமானின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
நசீம் குஷி 69 ஓட்டங்களையும் ஷொயெப் கான் 36 ஓட்டங்களையும் ஆக்கிப் இலியாஸ் 31 ஓட்டங்களையும் அயான் கான் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறஸ் க்றீவ்ஸ் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.