இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத்தொடர்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசாங்கம், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி வருகின்றது. அதில் ஒருபகுதியாக டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி முதல் சாத்தியமான முதலீட்டர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஜனவரி 12ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, மூன்று சர்வதேச முதலீட்டாளர்கள் டெலிகொம் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆசியாவின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் தற்போது ஆதரவு வழங்கியுள்ளது.
அதன்படி, நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள டெலிகொம் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.