NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமேசோனில் வெளியானது ‘நீலவெளிச்சம்’ – திகில் த்ரில்லர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் ‘நீலவெளிச்சம்’ சிறுகதையை தழுவி 1964இல் வெளியான மலையாளத் திரைப்படம் ‘பார்கவி நிலையம்’.

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தை தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு ரீமேக் செய்து வெளிவந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் வீடுகளில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆத்மாவுடன் நிதானமாக உட்கார்ந்து பேசி ஓர் உரையாடலுடன் ஆரம்பமாகிறது.

கைவிடப்பட்ட வீடொன்றில் இருப்பதாக நம்பப்படும் பார்கவியுடன் எழுத்தாளர் நடத்தும் உரையாடலே அதற்கு சாட்சி. அந்த வீட்டின் எல்லா இடங்களிலும் நிழல்போல் பரவியிருக்கும் பார்கவியிடம் பேசுவது போல எழுத்தாளர் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் காட்சிகள், பார்கவி கதாப்பாத்திரத்தின் மீது எழுத்தாளர் கொண்டிருக்கும் பிணக்கத்தை சொல்லியிருக்கிறது.

இந்தப் பிணக்கம் உருவமற்ற அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது பயத்தைக் குறைத்து அக்கதாப்பாத்திரத்தை அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆவல், வைக்கம் முகமது பஷீர் அவரது கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களோடு எத்தனை தீர்க்கமான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கடற்கரை கிராமம் ஒன்றின் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது பார்கவி நிலையம் என்ற பாழடைந்த பங்களா. பார்கவி (ரீமா கல்லிங்கல்) என்ற இளம்பெண்ணின் ஆவி உலவுவதாக அவ்வூர் மக்களால் நம்பப்படும் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார் எழுத்தாளர் (டொவினோ தாமஸ்) ஒருவர். தனது காதலன் சசிகுமாரின் (ரோஷன் மேத்யூ) பிரிவு தாங்காமல், பார்கவி தற்கொலை செய்துகொள்கிறாள். பார்கவியின் இந்த கதையை எழுத தொடங்கும்போது, அக்கதையில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் எழுத்தாளருக்கு தெரிய வருகிறது.

பார்கவி யார்? சசிகுமாரும் அவளும் எப்படி காதலர் ஆகிறார்கள்? இந்தக் காதலுக்கு பிரச்சினையாக இருப்பது யார்? சசிகுமார் எப்படி இறந்து போனார்? பார்கவி இறந்து போவதற்கான காரணம் என்ன? எழுத்தாளருக்கு இந்த உண்மைகள் எப்படி தெரிய வருகிறது? – இவற்றுக்கான தீர்க்கமான முடிவுகளே படத்தின் திரைக்கதை.

இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் நாடக பாங்கில் அமைந்துள்ளது. திகிலூட்டும் காட்சிகள் பயத்தைக் கொடுப்பதற்கு பதில் இரசிக்கும் வகையில் இருப்பதற்கு படத்தின் ஒளிப்பதிவும், இசையும், கலை இயக்கமும் உதவியிருக்கிறது.

ரீமா கல்லிங்கலும், ரோஷன் மேத்யூவும் 60-70களின் காலத்தை பிரதிபலிக்கும் காதலர்களாக அழகு சேர்க்கின்றனர். மதில் சுவரின் இருவேறு பக்கத்தில் இருந்தும் காதலை பரிமாறிக் கொள்ளும் காட்சிகளிலும், கண்களால் காதலை கடத்திக் கொள்ளும் காட்சிகளிலும் இருவரும் மிளிர்கின்றனர். ரீமா கல்லிங்கலின் உறவுக்காரராக வரும் ஷான் டாம் சாக்கோவும் தனது நேர்த்தியான வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட பெண்களின் ஆவிகள் வெள்ளைப் புடவையில் இறந்துபோன இடத்தைச்சுற்றியே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சுற்றி வரப்போகிறது என்ற லாஜிக்கான கேள்வி படம் பார்க்கும் பலருக்கு வரும். இந்தக் கேள்விக்கு 1964இல் வெளிவந்த பார்கவி நிலையத்தின் ரீமேக்தான் நீலவெளிச்சம் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 23ஆம் திகதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles