இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் தம்பதி சண்டை போடுவதுடன் தி ரோடு படம் துவங்குகிறது. கிரிமினல்களிடம் சிக்கி அவர்கள் இறக்கிறார்கள். ஆனால் அதை சாலை விபத்து என்று சொல்லிவிடுகிறார்கள்.
அதனால் படத்தின் ஹீரோயினான மீரா(த்ரிஷா) மற்றும் அவரின் குடும்பத்தார் சாலை வழியே ஒரு ட்ரிப் போகலாம் என திட்டமிடுவதை பார்க்கும்போது நமக்கு கவலையாக இருக்கிறது. ஆனால் மீராவின் கணவர் ஆனந்த்(சந்தோஷ் பிரதாப்) மற்றும் மகன் கவின் ட்ரிப் கிளம்புவதற்கு முன்பு அந்த குடும்பம் எப்படி சந்தோஷமானது என்பதை காட்டுகிறார் இயக்குநர். ஆனால் அது ரொம்ப போலியாக தெரிகிறது.
இதையடுத்து நேராக கதைக்கு வந்துவிடுகிறார் இயக்குநர். ஒரு பக்கத்தில் தன் குடும்பத்தாரை இழந்த மீரா அது சாலை விபத்து இல்ல திட்டமிட்டு செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்கிறார். கான்ஸ்டபிள் சுப்ரமணி(எம்.எஸ். பாஸ்கர் ) மற்றும் தோழி அனு(மியா ஜார்ஜ்) ஆகியோரின் உதவியுடன் தன் குடும்பத்தாரை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
மறுபக்கம் மதுரை அருகே இருக்கும் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியான மாயா(ஷபீர் )மீது ஆசைப்படும் ஒரு மாணவி அவர் மீது பாலியல் புகார் தெரிவிக்க அவர் அசிங்கப்படுகிறார்.
இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு கட்டத்தில் ஒன்றாகிறது என்பதை காட்டிய விதத்தில் நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் வசீகரன். விசாரணை நடக்கும் விதம் நம்மை கவர்கிறது.
மீராவின் பாதுகாப்பு குறித்து நம்மை கவலைப்பட வைத்திருக்கிறார் அருண். ஆனால் வில்லனுக்காக நம்மை ஃபீல் பண்ண வைத்தது தான் சிறப்பு. ஒரு முக்கிய கதாபாத்திரம் மாறும் விதத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
நெடுஞ்சாலையில் நடக்கும் குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் முக்கிய மூளை குறித்து தெரிய வந்ததும் த்ரில் போய்விடுகிறது. அதில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் படத்தை ஒரு வழியாக முடிக்க வேண்டுமே என முடித்தது போன்று இருக்கிறது.
தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஷபீர். இது ஷபீரின் படமாகும்.