தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் மே-12 ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் சூழலில் இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான படம் ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’. கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் திஷா பதானி, கியாரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா சாவ்லா, கிராந்தி பிரகாஷ், அலோக் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூயோஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இப்படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யயப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி எந்த மாநிலத்திற்கு விளையாட சென்றாலும் அங்கு கிடைக்கும் ரசிகர்பட்டாளத்தின் வரவேற்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.