விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு விரேஷ் ஸ்ரீவல்சா மற்றும் பிஷக் ஜோதி ஆகிய இருவர் இசையமைத்திருந்தனர். இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன.படத்திற்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, நேற்று முதல் தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன.இந்நிலையில் இப்படத்தை தடை செய்வதாக அம்மாநில மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுப்படுத்தியது. தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ திரிக்கப்பட்ட கதையாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பாஜகதான் நிதியுதவி செய்துள்ளது” என்றார். ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் நேற்று (மே 7) வரை மூன்றே நாட்களில் ரூ.35 கோடி அளவில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.