பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ‘ஸ்டார்டம்’ என்ற வெப் தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ஷாரூக் கானின் மூத்த மகன் ஆர்யன் கான் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
அதன் பிறகு நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஆர்யன் கான் தவிர்த்து வந்தார். அவர் விரைவில் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ஆர்யனுக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று ஷாரூக் கான் பல பேட்டிகளில் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ஒரு தொடரை இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்கு கிடைத்துள்ளது. இத்தொடருக்கு ‘ஸ்டார்டம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பாலிவுட் துறையின் பின்னணியில் நடப்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இதன் கதைக் களம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து இத்தொடரை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.