NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ – படம் எப்படி இருக்கு?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பெற்றோர் இல்லாமல் தனியாக வாழும் நாயகி சித்தி இட்னானியை அவரிடம் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்ய முரட்டு முறை மாமன்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் சித்தி இட்னானி அவர்களை அறவே வெறுக்கிறார். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் காதர் பாட்சா ஆர்யாவை பார்க்க நாயகி செல்கிறார். ஆனால் போன இடத்தில் மனம் மாறி திரும்பி வந்து விடுகிறார். இதை அறிந்து கொண்ட ஆர்யா, ஜாமினில் வெளியே வந்து சித்தி இட்னானியை தேடி அவர் ஊருக்கு வருகிறார்.

வந்த இடத்தில் நாயகியின் முறை மாமன்களோடு ஏற்படும் தகராறில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் மூன்று தலைக்கட்டுகளை போட்டு அடித்து வெளுத்து விடுகிறார். இதையடுத்து நாயகியின் பிரச்சனையை அறிந்து கொண்ட ஆர்யா நாயகிக்கு அரணாக அங்கேயே தங்கி விடுகிறார்.

இதற்கிடையே ஆர்யாவின் ஃப்ளாஷ் பேக்கில் அவரின் வளர்ப்பு அப்பா பிரபுவுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக அவரின் எதிரிகளை தன் சொந்த ஊரில் பந்தாடி விட்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இப்படி ஆர்யாவின் எதிரிகளும் சித்தி இட்னானி எதிரிகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஒன்று கூடி ஆர்யாவையும், நாயகி சித்தி இட்னானியையும் பழிவாங்க படையெடுக்கின்றனர். இதைத் தொடர்ந்து அந்த கும்பலிடம் இருந்து ஆர்யா சித்தி இட்னானியை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் மீதி கதை.

ஒரு கதையாக பார்க்கும் பொழுது இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதும் போல் ஒரு பழிவாங்கல் கதையை தன் பாணியிலேயே கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

பொதுவாக முத்தையா படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதுவே படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனாலேயே இப்படம் ஆரம்பித்து முடியும் வரை வெறும் சண்டைக் காட்சிகளை வைத்தே முழுப் படத்தையும் முடித்திருக்கிறார். முதல் பாதையில் மட்டுமே ஐந்து முதல் ஆறு Fight சீன்கள் வந்து தெறிக்க விட்டிருக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியிலும் மூன்று, நான்கு ஃபைட் சீன்கள் வந்து வெட்டுக் குத்து, ரத்தம், வெடிகுண்டு என தியேட்டர் ஸ்கிரீனை தெறிக்க விட்டு படம் முடிகிறது. இதற்கு நடுவே ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகளும், குடும்ப காட்சிகளும், காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் செருகி படத்தை இரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முத்தையா படங்களின் முரட்டு நாயகனாக பிரதிபலித்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.முரட்டு உடம்பான ஆர்யா அடித்து துவம்சம் செய்கிறாரே தவிர நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை. குறிப்பாக அவரது வேலையை செவ்வனே செய்து விட்டு சென்றிருக்கிறார். நாயகி சித்தி இட்னானி வழக்கமான முத்தையா படங்களின் நாயகியாக வந்து சென்று இருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் அவரது வாய்ஸ் சிங்க் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம்.
மற்றபடி படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் முக்கிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் சில நிமிடங்களே ஆங்காங்கு வந்து வந்து செல்கின்றனர். தற்போது உள்ள தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் முரட்டு மீசை, முரட்டு உடம்பு, முரட்டு பார்வை இருக்கிறதோ அவர்கள் அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் வில்லன்களாக நடித்து அடி உதை வாங்கி மடிந்திருக்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் பின்னணி இசை தெறிக்கவிட்டு இருக்கிறது. வெறும் ஆக்‌ஷன் காட்சிகளே படம் முழுவதும் படர்ந்து இருப்பதால் பின்னணி இசையை பயங்கர சத்தமாக கொடுத்து கூஸ்பம்ப் ஏற்படுத்த முயற்சி செய்து இருக்கிறார். இவரது இசையில் ‘கறிக் குழம்பு வாசம்’ பாடல் மட்டும் கேட்கும் ரகம். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மிக உதவி கரமாக அனல் அரசின் ஸ்டண்ட் கொரியோகிராபி தரமாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

Share:

Related Articles