தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, திருமணத்துக்கு பிறகும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ உள்பட பல படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
அதேபோல சீனியர் நடிகையான திரிஷா கமல்ஹாசனின் ‘தக்லைப்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படங்களில் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்.
இளம் நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு நயன்தாராவும், திரிஷாவும் படங்களில் நடித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.
ஆனால் இவர்களையே கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா முந்திவிட்டது தான் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறாராம். பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா ‘ஓவர் டேக்’ செய்துள்ளார்.







