(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர்களின் தனித்துவமான உரிமையை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் திரைப்படமே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகும்.
சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், இயக்குநர்கள் மகிழ்ந்திருமேனி, மோகன் ராஜா, கரு. பழனியப்பன், ரகு ஆதித்யா, கனிகா, ராஜேஷ் மற்றும் பலர் அதில் இணைந்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்ற சூழலில், படையினரின் குண்டு வீச்சு சத்தத்தை விரும்பாத ஒரு சிறுவன், அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒலி எழுப்பி கொண்டே இருக்கிறார். அது அவனுக்கு நிவாரணத்தை தருவதுடன் அவனுள் இருக்கும் இசை திறமையும் வெளிப்படுத்துகிறது. எம் மண்ணில் பிறந்த அந்த சிறுவன், கிறிஸ்துவ பாதிரியார் (ராஜேஷ்) ஒருவர் மூலம் இலண்டனுக்கு செல்ல திட்டமிடுகிறார். இதற்காக கண்டி புற வழிச்சாலை வழியாக வாகனத்தில் பயணிக்கும் போது, படையினரின் சோதனையில் சிக்கிகுண்டு வெடிப்புக்கு ஆளாகி அநாதையாகிறார்.
புனிதன் என்ற இயற்பெயரை கொண்ட அவன், இந்தியாவில் அகதியாக புலம்பெயர்ந்து ஊத்துப்பட்டி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். சந்தர்ப்பசூழல் நிலையின் காரணமாக கிருபா நதி என்ற பெயரில் தமது பெயரை பதிவு செய்து கொண்டு வாழ தொடங்குகிறார்.
இவர் இசைத்துறையில் தேர்ச்சி பெற்று சர்வதேச அளவிலான புது இசை கோர்வை ஒன்றே உருவாக்கி அதை இலண்டனில் உள்ள றோயல் மியூசிக் அகடாமியின் போட்டி பிரிவுக்கு அனுப்புகிறார். ஆனால் நாடற்றவன் என்ற காரணத்திற்காக அவர் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார். இது தொடர்பாக போட்டியை நடத்தும் விழா குழுவினருக்கு நெருக்கடியும், அழுத்தமும் ஏற்படுகிறது. இங்கிலாந்து மற்றும் இந்திய அரசாங்கம் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் அகதியாக வாழும் புனிதன் என்ற கிருபாநிதிக்கு கடவு சீட்டு வழங்கி, அவரை அந்த தனித்திறன் இசை போட்டிக்கு அனுப்புகிறது.
அங்கு அவர் தான் யார்? என்ற உண்மையை சொல்வதுடன், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் கருத்தியலை இந்த உலகம் மெய்ப்பிக்க வேண்டும். அதற்கான செயல் திட்ட நடவடிக்கையாக பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்கலாம் என தன் எண்ணத்தையும், கதையின் அடி நாதத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.
இதற்கிடையில் அவர் கிருபா நதி என்ற பெயரில் தனது பெயரை பதிவு செய்து கொண்டு வாழ்ந்தது ஏன்..? கிருபா நதியை சட்டவிரோதமாக கொலை செய்ய வேண்டும் என தமிழக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக முயல்கிறார். அது ஏன்..? ‘செம்மறிக்குட்டி’ என செல்லமாக தனது மகளை விளிக்கும் தேவாலய பியானோ இசை கலைஞர் மோகன் ராஜா-மேகா ஆகாஷ் இவர்களுக்கான உறவு, நிலச்சரிவில் சிக்கும் இந்த தொன்மையான தேவாலயம்.. இதனை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடும் புனிதன், இப்படி ஏராளமான சுவாரசியமான முடிச்சுகளை போட்டுக் கொண்டே இப்படத்தின் திரைக்கதையை விவரித்திருக்கிறார் அறிமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோஹந்த்.
திரைக்கதையின் பல இடங்களில் பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழுகிறது. இருப்பினும் இயக்குநர் சொல்ல வேண்டும் என நினைத்த கருத்து.. சர்வதேச மக்களுக்கானது என்பதால்.. குறைகளை மறந்து பாராட்டக்கூடியதாக உள்ளது.
‘இமைத்திடாதே உன் விழியின் வழியே நுழைய பார்க்கிறேன்… என்ற பாடல் கவிதையாகவும், காதலாகவும் இரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலை தவிர்த்து பின்னணியிசையிலும் நிவாஸ் கே.பிரசன்னா தன் திறமையை நிரூபித்துள்ளார்.