NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஸ்கூப்’ – கதை எப்படி இருக்கு? வாங்க பாரக்கலாம்!

‘ஸ்கேம் 1992’ வெப் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த ஹன்ஸல் மேத்தாவின் அடுத்த படைப்பாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் ‘ஸ்கூப்’. கதை எப்படி இருக்கு வாங்க பாரக்கலாம்.

மும்பையின் ஒரு பிரபல நாளிதழில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜக்ருதி பதக் (கரிஷ்மா டான்னா) எப்படியாவது தினமும் தன்னுடைய ஸ்டோரி முதல் பக்கத்தில் இடம்பிடித்த விடவேண்டும் என்ற முனைப்புடன் வேலை செய்கிறார். தன்னுடைய வலுவான சோர்ஸ்களின் உதவியால் அவருடைய செய்திகள் கவனம் பெறுகின்றன. இதனால் வேலைக்கு சேர்ந்தே ஏழே ஆண்டுகளில் பல்வேறு பதவி உயர்வுகள் அவருக்கு கிடைக்கின்றன. குடும்பத்தை, மகனைக் கூட கவனிக்காமல் நேரம் காலமின்றி ‘எக்ஸ்க்ளூசிவ்’ செய்திகளுக்காக உழைக்கிறார்.

பத்திரிகையின் ஆசிரியர் இம்ரானின் (முஹம்மது ஜீசான் அய்யூப்) ஆதரவும் அவருக்கு இருப்பதால் சக ஊழியர்களுக்கு ஜக்ருதியின் வளர்ச்சி பொறாமையை ஏற்படுத்துகிறது. ஒருநாள் மற்றொரு பிரபல பத்திரிகையின் கிரைம் ரிப்போர்ட்டரான ஜெய்தீப் சென் (ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி) நடுரோட்டில் சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இந்த கொலைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார் கேங்ஸ்டர் சோட்டா ராஜன். சோட்டா ராஜனுடன் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக கூறி ஜக்ருதியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். உண்மையில் ஜெய்தீப்பை கொன்றது யார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘ஸ்கூப்’.

ஒரு உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாக எழுதி அதற்கான நம்பகத்தன்மையை பார்வையாளர்களிடையே உருவாக்குவது சுலபமான காரியமல்ல. ‘ஸ்கேம் 1992’ தொடரின் மூலம் கவர்ந்த ஹன்ஸல் மேத்தா இந்த முறையில் சொல்லி அடித்திருக்கிறார்.

இன்றைய டிஜிட்டல் உலகில், ஊடக நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டி, மற்றவர்களை விட முந்தி எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரியை கொடுக்க வேண்டும் என்ற பத்திரிகையாளர்களின் வேட்கை, அந்த வெறி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சுற்றி இருப்பவர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை போகிற போக்கில் அப்பட்டமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். ஒரு மரண வீட்டில் செய்தி சேகரிக்க வரும் நிருபர் ஒருவரிடம் ‘எதுக்கு இவ்ளோ அவசரம்?’ என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர் கூறும் பதில், அவசரப்படலன்னா மக்கள் வேறு சேனலை மாத்திடுவாங்க சார்’. டிஜிட்டல் மீடியாவின் இன்றைய நிலையை இந்த ஒற்றை வசனம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது.

பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கரிஷ்மா டான்னா ஆர்வம் மிகுந்த நிருபராக தொடர் முழுவதும் ஸ்கோர் செய்கிறார். எடிட்டராக வரும் முஹம்மது ஜீசான் அய்யூபின் நடிப்பு அபாரம். செய்தியாளர்கள் ஆர்வமிகுதியை அவ்வப்போது அடக்கி வைக்கும் பக்குவமான ஆசிரியராக ஸ்கோர் செய்கிறார். அச்சிந்த் தாக்கரின் பின்னணி இசை, இந்தி வெப் தொடர்களுக்கே உரிய டல் டோன் ஒளிப்பதிவு ஆகியவை கதையின் ஓட்டத்துக்கு வலு சேர்க்கின்றன.

க்ரைம் த்ரில்லர் விரும்பிகள், ஒரே மூச்சில் 6 எபிசோட்களை ஒன்றாக அமர்ந்து ‘பிங்கே-வாட்ச்’ செய்பவர்கள் ‘ஸ்கூப்’ வெப் தொடரை தாராளமாக பார்க்கலாம்.

Share:

Related Articles