இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு தலைவர் 171 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் தலைவர் 171 படப்பிடிப்பில் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். கடந்த ஆறு மாத காலமாக இப்படத்தின் வேலைகளில் இருந்த லோகேஷ் தற்போது நடிகர்களின் தேர்வை தொடங்கியுள்ளார். அதன்படி இப்படத்தில் நடிக்க பிரபல நடன மாஸ்டர் சாண்டி முதல் ஆளாக கமிட்டாகியுள்ளார்.
தற்போது நடிகை ஷோபனாவிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். ஷோபனாவிற்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால் கண்டிப்பாக அவர் தான் தலைவர் 171 திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தின் மூலம் ஷோபனா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.