இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் குடும்பத்தில் பிறக்கிறார் முரளிதரன் (மதுர் மிட்டல்). அவரை கிறிஸ்தவ, உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கிறார்கள் அவர் பெற்றோர்.
கிரிக்கெட் ஆர்வம் கொண்ட அவருக்கு அந்தப் பள்ளியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பள்ளி போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுக்கிறார். பிறகு பல சோதனைகளையும் சவால்களையும் கடந்து சர்வதேச அரங்கில் 800 விக்கெட்களை வீழ்த்தி உலகின் சிறந்த பந்துவீச்சாளராக அவர் உருவெடுப்பதே மீதிக் கதை.
முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கான போராட்டங்களை முதல் பாதியிலும் அங்கு எதிர்கொண்ட சோதனைகளையும் சாதனைகளையும் 2-ம் பாதியிலும் சொல்லியிருக்கிறார்கள்.
அவரின் கிரிக்கெட் சாதனைகளுக்கு இணையாக, தனிநபராக அவர் எதிர்கொண்ட சோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி தலைவர் ஒருவரை சந்திக்கும் காட்சி, முரளிதரன், இலங்கை இனக்கலவரத்தால் இரண்டு தரப்பிலும் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் குறித்து வருத்தமும் தமிழ் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்றுஉண்மையான அக்கறையும் கொண்டிருந்ததை உணர்த்துகிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. இலங்கையின் கண்டி, கொழும்பு, இனக்கலவரக் காட்சிகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள், கிரிக்கெட் ஆடுகளத்தில் போட்டிகள் நடப்பது என பல வகையான களங்களையும் சூழல்களையும் நேரில் பார்ப்பதுபோல் கண் முன் நிறுத்துகிறது ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு.
முத்தையா முரளிதரனை ஒரு கிரிக்கெட் சாதனையாளராக மட்டுமல்லாமல் நேர்மையான மனிதராகவும் தமிழ் மக்கள் மீது அக்கறைகொண்ட இலங்கைத் தமிழராகவும் பார்வையாளர்கள் மனங்களில் பதிய வைத்திருக்கும் இந்தப் படத்தை குறைகள் மறந்து வரவேற்கலாம்.