சென்னையில் உள்ள IIT (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது.
இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் IIT இயக்குநர் காமகோடி.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய’த்துக்கு இளையராஜா நேற்று மாலை (மே 20) அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக உலகம் மற்றொரு மொசார்ட்டை உருவாக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். ஒருவனுக்கு தண்ணீர் கொடுக்காதே, தாகம் கொடு, தண்ணீரை அவன் தேடிக்கொள்வான். இசைகற்க கிராமத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த போது எனது அம்மா எனக்கு நான்கு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
இசை என் மூச்சானது. நான் சாதித்ததாக கூறுகிறார்கள். ஆனால் இப்போதும் அந்த கிராமத்திலிருந்து கிளம்பி வந்த சிறுவன் போலவே உணர்கிறேன்,” என்று பேசினார்.
இந்த முயற்சி நாடு முழுவதுமே கவனத்தை ஈர்த்துள்ளது, அதேசமயம் தொழில்நுட்பம் சார்ந்த IIT படிப்புகளில் இசையமைப்பாளர் பெயரிலான ஆராய்ச்சி மையம் என்ன செய்ய முடியும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.