காதலிக்க எல்லை இல்லை என்பது போன்று தீவிரமாக காதலிக்கும் பரத் மற்றும் வாணி போஜன் அறிமுகத்துடன் படம் துவங்குகிறது. திருமணத்திற்கு பிறகு நிம்மதியாக வாழ்கிறார்கள். திவ்யாவின் அப்பா கொடுத்த வீட்டில் வசிக்கிறார்கள்.
திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் அவர்களின் உறவில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் அவர்கள் ஏன் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் அது தெரிய வருகிறது.
மன அழுத்தத்தில் அவதிப்படும் அஜய் மதுவில் நிம்மதி தேடுகிறார். தன் பிரச்சனையை எல்லாம் திருமண பந்தத்தில் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் கோபத்தில் மனைவியை தாக்க அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் ஒளிக்கா செய்யக் கூட திட்டம் போடுகிறார் அஜய்.
இரண்டாம் பாதியில் தான் அஜய், திவ்யா இடையேயான உறவில் இருக்கும் சில உண்மைகள் தெரிய வருகிறது. அடுத்தது என்னவென்று நகத்தை கடிக்க வைக்கவில்லை, இருக்கையின் நுனிக்கு கொண்டு வரவில்லை. முதல் பாதியிலேயே அஜய், திவ்யா பற்றி கூடுதல் தகவல் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
திருமணத்தில் கவனிக்கப்படாத பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளை ஆராய முயற்சி செய்திருக்கிறது “Love”. ஆனால் படம் பார்ப்பவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது. கள்ளக்காதல் விஷயம் பற்றி கூட பேசியிருக்கிறது.