பெற்றோரின் அரவணைப்பில் வளரும் முஃபாசா, ஆற்று வெள்ளத்தில் சிக்கி வேறொரு நாட்டுக்கு அடித்துச் செல்கிறான்.
அங்கு அவனுக்கு உதவிக்கரம் நீட்டுகிறான் அந்நாட்டு இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், எங்கு அதை அவனிடமிருந்து இவன் பரித்து விடுவானோ என்ற எண்ணத்தில் முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி.
இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா.
அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்குக் குறி வைக்கிறான் கீரோஸ். இவனின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை மீண்டும் கண்டடைந்தானா முஃபாசா என்பதே முஃபாசா: தி லயன் கிங் (Mufasa: The Lion King) படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
முஃபாசாவிற்கு அர்ஜூன் தாஸ் குரல் கொடுத்துள்ளார். சிங்கத்துடைய கம்பீரம் மிடுக்கு என அவரது தனித்துவமான குரலில் அசத்தியுள்ளார். டாக்கா கதாப்பாத்திரத்திற்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளார். அவரின் குரல் நம்மை அந்த கதாப்பாத்திரத்தை அதிகம் உணர்ந்துக் கொள்ள உதவியுள்ளது. டிமோன் அண்ட் பும்பா வாக ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம்புலி பேசியுள்ளனர். அவரகளது பாணியில் நகைச்சுவையாக சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
இந்தப் பாகத்தை இயக்கியிருக்கிறார் மூன்லைட் புகழ் பேரி ஜென்கின்ஸ். முதல் பாகத்தை ஒப்பிடும் போது இந்த பாகத்தில் நகைச்சுவை காட்சிகள் சிலவை வொர்க் அவுட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் கதை யூகிக்கும் வகையில் இருப்பது மைனஸ். இரண்டாம் பாதி கதைக்களத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர். எமோஷனல் காட்சிகள் நொர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனசாக உள்ளது.
ஒளிப்பதிவு & கிராபிக்ஸ்
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக கட்சிதமாகவும் தத்ரூபமாகவும் படக்குழு மேற்கொண்டுள்ளது. காட்டுக்குள் இருக்கும் உணர்வை ஒவ்வொரு காட்சிகளிலும் பார்வையாளர்களுக்கு கடத்திக் கொண்டே இருக்கின்றனர். புலி, யானை, சிங்கம், பறவை என அடர்ந்த காட்டை மிக உண்மைக்கு அருகில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இசை
ஹான்ஸ் சிம்மரின் இசை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்
தயாரிப்பு
இப்படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.