28 ஆண்டுகள் கழித்து பல போராட்டங்களுக்கு பின் இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லைகா இப்படத்தை தயாரித்துள்ளது.
சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் உடன் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என போராடுகிறார்.
Youtube சேனல் மூலம் இதை நகைச்சுவையுடன் சேர்த்து செய்து வரும் சித்தார்த் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது, இதற்கு இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என முடிவு செய், இந்தியனை தேடும் பயணத்தில் இறங்குகின்றனர்.
#comebackindian என்கிற டேக்கை வைரலாக்கி இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை இந்தியன் சேனாதிபதிக்கு தெரிவிக்கின்றனர். உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இது தெரியவரும் என தொடர்ந்து முயற்சி செய்ய, தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார்.
இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் வீரசேகரன் சேனாபதியை பிடிக்க வேண்டும் என போலீஸ் ஒரு புறம் இருக்க, லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என இந்திய வரும் சேனாதிபதி என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? இதன்பின் நடக்கப்போவது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் குறை சொல்ல முடியுமா! அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைக்கிறது. அவர் நடிப்பில் குறை கண்டுபிடித்தால், குறை கண்டுபிடிக்கும் நபர்களிடம் தான் இனிமேல் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியன் முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை சுட்டிக்காட்டி படம் எடுத்திருந்த ஷங்கர், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் என்ன நடக்கும் என்பதை பிரமாண்டமாக காட்டியுள்ளார்.
சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, ஜெகன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சூப்பர். அதே போல் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு ஆகியோரை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்க்க முடிந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.ஜே. சூர்யா சில நிமிடங்கள் தான் வருகிறார். அடுத்த பாகத்தில் தான் அவருடைய மொத்த வில்லத்தனம் வெளிப்படும்.
				
															






