அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த வாரம் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. மறுநாள் இப்படத்தை திரையிட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் மறுத்து விட்டன. எனினும் வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை (மே 12) வெளியிட வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் நாயகி அடா ஷர்மா, “எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இதுவரை ரூ.68 கோடி வசூலித்துள்ளது.