சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று சுனாமியால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அதன்படி, இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2004 சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்களாகின்ற போதிலும், அதன் தாக்கம் இன்னும் ஆறாத வடுக்களாகவே உள்ளன.
சுனாமியால் உறவினர்களை இழந்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கின்றது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்தவகையில் இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுனாமியால் எங்களுடைய வட, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரவலத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.