எதிர்வரும்; தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக விவசாய அமைச்சர் மு.னு லால்காந்த மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று மூன்றாவது முறையாக கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மற்றும் அந்தப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதோடு, இது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், வெதுப்பக பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.