NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கருடன் – திரைப்படம் எப்படி

கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் ஒன்றினை யாருக்கும் தெரியாமல் அபகரிக்க நினைக்கும் அமைச்சர் ஒருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நகர்த்தும் காய்களுக்கு மத்தியில் இரண்டு நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நண்பர்களுடன் இருக்கும் தீவிர விசுவாசியான சொக்கன், விசுவாசத்திற்கும் சுயமரியாதைக்கும் உண்மைக்கும் இடையில் எப்படி சிக்கித் தவிக்கிறார் என்பதே கருடனின் கதைக்களம் எனலாம். 

பட்டாஸ், கொடி போன்ற பாஸ் மார்க் வாங்கவே திணறும் படங்களைக் கொடுத்துவந்த இயக்குனர் துரை செந்தில்குமார், கருடன் படத்தின் மூலம் முதல் பெஞ்ச் மாணவராக மாறியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இயக்குனராக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாகவும், நகர நகர சலிப்பை ஏற்படுத்தும் கதையம்சம் இந்த படத்தில் இல்லை. முதலிலிருந்து கடைசிவரை ஒரே வேகத்தில் நகரும் கதை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நல்ல நடிப்பைக் கொடுத்து படத்தை அழகாக நகர்த்தியுள்ளனர். உன்னி முகுந்தன் பார்வையாக பொருந்தினாலும், கதாப்பாத்திரமாக பொருந்த சற்று சிரமப்பட்டிருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ள ஷிவதா நடிப்பில் தேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்த படம் நிறைய இடத்தை வழங்கியுள்ளது.

தமிழில் நல்ல படங்களில் நடித்து சில நாட்கள் காணாமல் போன அவர், இனி  மீண்டும் நிறைய படங்களில் வலம் வருவதற்கான வாய்ப்பை இந்த படம் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார் என்று சொல்லலாம். சமுத்திரக்கனி கதை கேட்கும் நிதான நடிப்பை வழங்கியுள்ளார்.

விண்ணரசியாக நடித்துள்ள ரேவதி ஷர்மா நல்ல அறிமுகமாக மின்னுகிறார். திரையைத் தொட்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி ஹரிப்பிரியன் கதாப்பாத்திரத்தோடு தோற்றத்தில் பொருந்தியிருந்தாலும் காட்சிகளில் ஏனோ பொருந்த தவறுகிறார்.

இவர்கள் அனைவரையும், கதை நடைபெறும் நிலப்பரப்பையும் ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவு அழகாக காட்டியுள்ளது. காட்சிகளாக படம் எந்த தடையுமில்லாமல் நகர்வது, பிரதீப் இ ராகவின் கச்சிதமான எடிட்டிங்கை காட்டுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இதமாக உள்ளது. பேவரட்டாக மாறக்கூடிய பாடல்களை அளித்திருக்கிறார்.

இவையணைத்தையும் தாண்டி, சூரி ஒரு நேர்த்தியான நடிகனாக பரிணமித்துவருவதை நம்மால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

அடக்கமான அடியாளாக உடன் வலம் வருவது, தன் அண்ணனை விளையாட்டுக்கு அடிக்கப்போகும் சசிக்குமாரை தடுத்து, விசுவாச வெகுளியாக சிரிப்பது, கையில் குழந்தையோடு அழுவது போன்ற காட்சிகளில் கதாப்பாத்திரமாக மாறும் திறனைப் பெற்று நம்மை கவர்கிறார்.

கருணா சூதாட்டத்தில் பணத்தை இழந்தது, அதற்கு அடிமையாக இருப்பது போன்றவையும் வசனங்கள் மூலம் மட்டுமே தெரியப்படுத்தியது மற்றொரு சிறிய மைனஸ்.

கிணற்றுக்குள் நடக்கும் நகைச்சுவைக் காட்சி, சிரிக்க வைக்கத் திணறுவதைப் பார்க்க முடிகிறது. படத்தில் ஆங்காங்கே சூரிக்கு சாமி வரும் குணத்தை நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் திரையரங்கில் கண்டுகளிக்க ஏற்ற படம் கருடன் எனலாம்.

Share:

Related Articles