NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கருடன் படம் எப்படி

நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன்.

தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது.

அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும்.

அதற்காக ஆதி – கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை.

வெற்றிமாறன் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார்.

மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம், நடுவே இழையோடும் காதல், கதைப்போக்கில் வந்துபோகும் காமெடி, துரோகம், திருப்பங்கள் என தெளிந்த நீரோடை போல எங்கும் நிற்காமல் ஓடுகிறது படம்.

விறுவிறுப்பை மூலதனமாக கொண்டு நகரும் திரைக்கதையில் அடுத்து என்ன என்பது சுவாரஸ்யம். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இடைவேளைக் காட்சி இந்த ஆண்டின் சிறந்த திரையரங்க அனுபவத்துக்கு உத்தரவாதம்.

சிங்கிள் ஷாட்டில் சூரி கேப் விடாமல் கொட்டித் தீர்க்கும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என அதீத வன்முறையும், தெறிக்கும் ரத்தமும் ஓவர் டோஸ்.

நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும்.

ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”, “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேநேரம் ய‘ஆம்பளன்னு நிரூபிக்க வைக்கில்ல” போன்ற வசனங்கள் அபத்தம்.

சண்டைக் காட்சி ஒன்றில் சசிகுமார் குழந்தையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கர்ணா கதாபாத்திரத்தின் மனமாற்றங்களில் அழுத்தமில்லாமல் கடக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் ‘மண், பெண், பொன்’ தான் காரணம் என்கிறது வாய்ஸ் ஓவர். பெண்ணை குற்றப்படுத்தும் வசனத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்?

கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆட்டத்தை ஆடுவது, விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் – உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்‌ஷன் பரிணாமம் என மொத்த திரையையும் ஆக்கிரமித்து நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் சூரி.

Share:

Related Articles