நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம். ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.
அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார்
என்பதையும் எதிர்பார்க்கிறோம்.
எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
இதுவரை கால எமது பாராளுமன்ற அரசியலில்,தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.