ஜனாதிபதித் தேர்தலில் பிரதான நான்கு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக சுமார் 3000 கோடி ரூபாயை விட அதிகமாக செலவிடப்படலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் “ஞாயிறு மவ்பிம” செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலவும் பிரச்சார தேவைகள், பிரச்சார விதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக ஒரு வேட்பாளருக்காக அல்லது ஒரு கட்சிக்காக 7 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீடுகளின் படி, மாவட்ட மட்டத்தில் பிரதான பேரணி ஒன்றை முன்னெடுக்க 70 இலட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சிறிய குழுக்களுக்கிடையிலான கூட்டத்திற்காக 2 இலட்சம் செலவிடப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக போஸ்டர், பெனர், பதாகைகள் போன்ற ஊடக மற்றும் சமூக ஊடக அறிவுறுத்தல்களுக்காகவும் பணத்தை செலவிட வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்காகவும் கடந்த தேர்தல்களை விட மேலதிகமாக செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 1 கோடியே 74 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அதற்கேற்ற விதத்தில் இந்த மதிப்பீடு கணிக்கப்பட்டுள்ளது.