ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்கினைப் பதிவு செய்து அந்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசியை எடுத்துச் செல்ல ஏற்கனவே இருக்கின்ற தடையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் சட்டத்தின்படி வாக்களிப்பு என்பது இரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.எனினும் வாக்குச்சீட்டைப் படம் எடுத்து அதன் இரகசியத்தன்மையை பேணாமை சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுறுத்தன் தெரிவித்துள்ளார்.