NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் உலகில் இன்றைய நாள் மிக முக்கியமான நாள்!

கிரிக்கெட் உலகில் இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

பொக்சிங் டே என அழைக்கப்படும் இன்றைய நாளானது, பெருநாள் என்றால் எப்படியோ, அதே போல் தான் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த பொக்சிங் டே.

பொக்சிங் டே என்றால் என்ன ?

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 26ஆம் திகதி தான் பொக்சிங் டே என்று அழைக்கப்படும். அந்த நாளில் ஏதாவது பொக்சிங் போட்டி நடைபெறுமா என்று கேட்டால் அது தான் இல்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் பரிசு பொருட்கள் ஒரு பொக்சில் தான் வரும் அல்லவா.. அந்த பரிசுப் பெட்டியை டிசம்பர் 26ஆம் திகதி தான் பிரித்து பார்ப்பார்கள்,

ஒரு சிலர் கிறிஸ்மஸ் அன்றே பரிசுப் பெட்டிகளை பிரித்து பார்ப்பார்கள். அப்போது வீட்டில் சேரும் பெட்டியில் பொருட்களை வைத்து ஏழை மக்களுக்கோ, வீட்டில் பணிபுரிபவர்களுக்கோ மகிழ்ச்சியாக வழங்குவார்கள். இதனால் தான் கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள் பொக்சிங் டே என்ற பெயர் வந்தது.

இந்த பொக்சிங் டே என்பது பிரிட்டனுடன் தொடர்புடைய ஒன்றாக உள்ளது. பிரிட்டனில் இது பொதுவிடுமுறை நாள். டிசம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமையாக இருந்தால் திங்களன்று விடுமுறை. ஞாயிறன்று வந்தால் செவ்வாயன்று விடுமுறை. இந்த பொக்சிங் டே என்பது மதத்துடன் தொடர்புடைய நாளாகாவும் உள்ளது. அயர்லாந்து மற்றும் ஸ்பெயினின் கேட்டலோனியா பிராந்தியத்தில் இது செயின்ட் ஸ்டீஃபென்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

பொக்சிங் டே அன்று வீட்டில் இருக்காமல் எங்கேயாவது வெளியே குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். அதனால் தான் பொக்சிங் டே அன்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது.

குறிப்பாக ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா நாடுகளில் பொக்சிங் டே டெஸ்ட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறும். அன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியை காண வழக்கத்திற்கு மாறாக இரு மடங்கு கூட்டம் சேரும். ஆஷஸ் டெஸ்ட் போட்டி பொக்சிங் டே அன்று மெல்போர்னில் நடைபெற்றால், பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தொடும்.

பொக்சிங் டே அன்று அதிக மக்கள் போட்டியை காண்பார்கள் என்பதால், அன்றைய தினம் விளையாட்டு உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பாக்சிங் டே கலாச்சாரம் முதலில் இங்கிலாந்தில் தான் தோன்றியது. பின்னர் அவர்கள் ஆண்ட நாட்டில் எல்லாம், கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள் பொக்சிங் டே சிறப்பாக கொண்டாடப்படும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles