NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு பலத்த பாதுகாப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்நாட்களில் பாடசாலைகளுக்கு முன்பாகவும் வீதிகளிலும் விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மையில் வேனில் வந்த சிலர் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு உணவு கொடுத்து இரு குழந்தைகளையும் கடத்திச் செல்ல முற்பட்ட போது இரு பிள்ளைகளும் அக்குழுவிலிருந்து தப்பித்து அலறிய போது குறித்த வேன் பிரதேசவாசிகளுக்கு பயந்து தப்பிச் சென்றுள்ளது.

இது தொடர்பில் குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மன்னார் பொலிஸாருக்கும் பாடசாலைக்கும் அறிவித்ததையடுத்து, மன்னார் மாவட்ட அலுவலகம், பாடசாலை அதிபர்கள், மன்னார் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடி விசேட பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சிறுவர்கள் வீதியில் தனியாக நடமாட வேண்டாம் எனவும், குழுவாகச் செல்லுமாறும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்து பாடசாலைக்கு வரும் போது, தனியாக வராமல் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் பாடசாலைக்கு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்ட குழுவினர் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை எனவும், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles