(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஓமானுக்கு எதிராக புலவாயோவில் இன்று (23) நடைபெறவுள்ள பி குழுவுக்கான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்று சுப்பர் 6 சுற்றுக்கான வாய்ப்பை இலங்கை அதிகரித்துக்கொள்ளவுள்ளது.
அதேவேளை, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை ஈட்டிய ஓமான், இலங்கையுடனான போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
ஓமான் அணிக்கு இலங்கையின் இரண்டாவது டெஸ்ட் அணித் தலைவர் டுலீப் மெண்டிஸ் பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்த இரண்டு அணிகளும் சந்திக்கவுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக 6 விக்கெட்களை இழந்து 355 ஓட்டங்களைக் குவித்து 175 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, இரண்டாவது போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தப் போட்டியில் ஓமான் எதிர்பாராத வெற்றியை ஈட்டினால் அது தசுன் ஷானக்கவின் தலைமையிலான இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
எனவே தனது ஆரம்பப் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இலங்கை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அணியில் மாற்றம் இடம்பெறுவதாக இருந்தால் வேகப்பந்துவீச்சில் மாத்திரமே மாற்றம் ஏற்படும். துஷ்மன்த சமீர பூரண உடற்தகுதியைக் கொண்டிருந்தால் கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார அவருக்கு வழிவிடுவார். ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை.
மறுபுறத்தில் ஓமான் தமது அணியில் மாற்றமின்றி இந்தப் போட்டியை எதிர்கொள்ளும் என நம்பப்படுகிறது.