பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2001 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலப்புரி சட்டத்தின் படி, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 6 துறைகளின் பிரகாரம் குறிகாட்டிகளின் கீழ் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் எனவும் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியல் இறுதிப் பட்டியல் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சிறுநீரக உதவித்தொகை, அங்கவவீனர்களுக்கான உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியலையும் விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும தொடர்பில் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளையும் எதிர்ப்புகளையும் முன்வைப்பதற்காக இன்று முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விசேட கருமபீடத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சமூக நலன்புரி நன்மைகள் சபைக்கு கடந்த 20 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 முறையீடுகளும் 3 ஆயிரத்து 304 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.