(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் குறித்து விவாதிக்க புதன்கிழமை (26) நடைபெற உள்ள சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை எனவும் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் அதன் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் எதிர்வரும் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்கு தயாராகி வருவதாகவும் விஜித ஹேரத் எம்.பி நேற்று (23) ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு கடந்த பெப்ரவரி மாதத்திற்குள் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்த போதிலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் இதுவரை அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.