சீனாவின் ஹான்சு நகரில் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 21 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக 97 வீர, வீராங்கனைகள் மற்றும் 57 அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையின் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுடன் தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோனும் இந்தப் போட் டியில் பங்கேற்கவுள்ளனர். இதில் மொத்தம் 16 தடகள வீரஇ வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
தவிர ரக்பி அணியொன்று இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இலங்கை குழாத்தின் பிரதானி நிஷான்த பியசேன தேசிய ஒலிம்பிக் குழுவில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க, 800 மீற்றரில் கயன்திகா அபேரத்ன மற்றும் தருஷி கருணாரத்ன மற்றும் 1,500 மீற்றரில் கயன்திகா ஆகியோர் திறமையை வெளிப்படுத்து வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
45 நாடுகள் பங்கேற்கும் இம்முறைஆசிய விளையாட்டு விழாவில் மொத்தம் 481 தங்கப் பதக்கங்களுக்காக 12,500 வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.