கிழக்கு மாகாணத்திற்கு அருகில் உள்ள கடலில் பூகம்பம் ஏற்பட்டால், சுனாமி பேரலை தாக்கும் அபாயம் இருப்பதாக பூகோளவியல் விஞ்ஞானி பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிற்கு வடக்கிழக்கில் கடலில் 310 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று அதிகாலை 1.29 மணியளவில் 4.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
இந்த பூகம்பம் எந்த பிரதேசத்திலும் உணரப்படவில்லை. பூகம்பத்தை அளவிடும் கருவிகளில் மாத்திரம் பதிவாகியுள்ளது.
வங்காள விரிகுடா பிராந்திய கடலில் இதற்கு முன்னரும் அவ்வப்போது 3 மற்றும் 4 ரிச்டர் அளவிலான பூகம்பங்கள் ஏற்பட்டன. இந்த பிராந்தியத்தில் இந்த வருடம் பூகம்பம் ஏற்பட்டது இதுவே முதல் முறை.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலத்தில் இலங்கையிலும் இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பிலும் 15 பூகம்பங்கள் ஏற்பட்டன.
இதனிடையே இலங்கை அமைந்துள்ள இந்தோ அவுஸ்திரேலிய புவி தட்டின் எல்லையில் எதிர்காலத்தில் மேலும் பல பெரிய பூகம்பங்கள் ஏற்படலாம்.
கடந்த 10 மணி நேரத்தில் இந்தோ அவுஸ்திரேலிய புவி தட்டில் மாத்திரமின்றி இந்தோனேசியா, ஜப்பான் இடையிலான புவி தட்டில் 8 பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவை 4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளன.
ஆழ்கடலில் ஏற்பட்ட இந்த பூகம்பங்களால், இலங்கைக்கு சுனாமி ஆபத்து ஏற்படவில்லை.
எனினும் கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூகம்பம் ஏற்பட்டால், சுனாமி ஆபத்து ஏற்படலாம் எனவும் பேராசிரியர் அத்துல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.