முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் சரத்து 44(3) இன் அடிப்படையில், சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு தனக்கு கீழ் இருக்க வேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக, குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழுள்ள அமைச்சுகள் வருமாறு,
- பாதுகாப்பு அமைச்சு
- நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
- தொழில்நுட்ப அமைச்சு
- மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
- முதலீட்டு மேம்பாடு அமைச்சு
- சுற்றாடல் அமைச்சு
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றுமுன்தினம் (11) அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.