NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியத் தமிழரின் அடையாளத்தை மாற்றும் முயற்சி ‘மலையகத்தின் மிகப்பெரிய தொழிற்சங்கம் எதிர்ப்பு’

இந்திய வம்சாவளித் தமிழர்களை (மலையகத் தமிழர்) இலங்கைத் தமிழர் எனக் குறிப்பிட வேண்டுமென்ற இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு மலையகத்தின் மிகப்பெரிய தொழிற்சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை (மலையகத் தமிழர்), ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும் ஒரு செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், இவ்வாறான சுற்றுநிரூபங்களை வெளியிடுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு சுற்றுரூபம் வெளியிட எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் 12 ஜனவரி, 2023 திகதியிடப்பட்டு, பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு ‘இனத்தினைக் குறிப்பிடும்போது இந்திய தமிழர்ஃசோனகர் என்பதனை இலங்கைத் தமிழர்ஃசோனகர் என பயன்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள்’ என தலைப்பிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையர் என்ற வகையில் தனது இனத்தை பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிட இலங்கை பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் உரிமையுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது இனத்தின் அடையாளத்தை தீர்மானிக்கும் உரிமைமையை மூன்றாம் தரப்பினருக்கு வழங்க முடியாது எனவும், செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

‘இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 1948ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை இன்றி இருந்த எமது சமூகம் சுமார் 40 வருட போராட்டங்களுக்கு பின்னர் இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.’

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சுற்றுநிரூபத்திற்கு அமைய, மூன்றாம் தலைமுறை இந்தியத் தமிழர் (மலையகத் தமிழர்) தம்மை இலங்கைத் தமிழர் என பதிவு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியத் தமிழர் மற்றும் சோனகர்கள் இந்தியத் தமிழர் அல்லது இந்திய சோனகர் என அடையாளம் காணப்படல் வேண்டும் என்பதுடன் முன்னைய பரம்பரை இரண்டு (தந்தை மற்றும் பாட்டன்) இலங்கையில் பிறந்திருந்தால் தமிழ் மற்றும் சோனகர்கள் இந்தியத் தமிழர் அல்லது இந்திய சோனகர் என அடையாளம் காணப்படல் வேண்டும்.’

இதேவேளை, இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும் எனவும், பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

‘ பதிவாளர் நாயகத்தின் யோசனையுடன் நாம் உடன்படவில்லை. எமது மக்களுக்கு 200 வருடகால அடையாளம் உள்ளதுடன் 200ஆவது வருடத்தில் எமது அடையாளத்தை அழிப்பதற்கு முற்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற முற்படுவோம்.’ என அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles