கடிகல்ல மலையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், புட்கந்த மற்றும் கொலொன்ன கொண்டுகல பிரதேசத்தை அண்மித்த இரண்டு பிரதேசங்களில் உள்ள பன்னிரண்டு வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக கொலொன்ன பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ குழு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கடிகல்ல மலை உச்சியில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் இருபது ஏக்கர் நிலப்பரப்பில் விரிசல் வழியாக சேறும் சகதியுமாக ஓடுவதாகவும் கூறுகின்றனர்.
கொலொன்னையில் இருந்து நெடோல ஊடாக புட்கந்த வரையிலான வீதியானது மண்சரிவு அபாயம் உள்ள பகுதியினூடாக இடிந்து விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர். எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொலொன்ன, நெடோல, புட்கந்த ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு நான்கு தடவைகள் இ.போ.ச பஸ் இயங்குவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அபாயம் கொலன்ன மற்றும் புட்கந்த கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகளை பாதித்துள்ளது. வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். தற்போது, நிவாரணமாக, இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான உலர் உணவு மூட்டை வழங்கப்பட்டுள்ளது.